Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விண்வெளிப் பயணம் சொல்லும் ‘தூக்கத்தின் ரகசியங்கள்’

விண்வெளிப் பயணம் சொல்லும் ‘தூக்கத்தின் ரகசியங்கள்’

விண்வெளி வீரர்களுக்குத் தினமும் சுமார் 8.30 மணி நேரத் தூக்க வாய்ப்பு வழங்கப்பட்டாலும், பல பயணங்களில் அவர்கள் சராசரியாக 6 முதல் 6.30 மணி நேரமே தூங்குவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

டப்ளின்:

சூரிய உதயம், பகல், இருள், மீண்டும் உதயம் எனச் சுழலும் பூமியின் 24 மணி நேர வாழ்க்கைக்கு ஏற்ப மனித உடலின் உயிரியல் கடிகாரம் இயங்குகிறது. ஆனால், இயற்கையான நேரக் குறிப்புகள் மாறுபடும் விண்வெளியில் மனிதர்கள் எப்படித் தூங்குகிறார்கள்? இதற்கான ஆய்வுகள், தூக்கத்தையும் உடலின் நேரக் கடிகாரத்தையும் பற்றிய முக்கிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.


பூமியைச் சுமார் 90 நிமிடங்களில் சுற்றும் விண்கலத்தில், வீரர்கள் தினமும் சுமார் 16 சூரிய உதயங்களையும் மறைவுகளையும் காண்கிறார்கள். ஒவ்வொரு மறைவிலும் தூங்க முடியாது என்பதால், தூக்கம், உணவு, உடற்பயிற்சி, வேலை அனைத்துக்கும் ஒழுங்கான அட்டவணை அவசியம்.
தூக்கத்தை உயிரியல் கடிகாரமும், தூக்க அழுத்தமும் கட்டுப்படுத்துகின்றன. விழித்திருக்கும் நேரம் அதிகரிக்கும்போது தூக்க அழுத்தம் கூடுகிறது. தூங்கும்போது குறைகிறது.

 பொதுவாக இணைந்து செயல்படும் இவ்விரண்டின் ஒத்திசைவை விண்வெளிப் பயணம், இரவுப் பணி, நேர மண்டல மாற்றம் ஆகியவை சீர்குலைக்கலாம். மிகவும் சோர்வாக இருந்தாலும், உயிரியல் கடிகாரம் ‘பகல்’ எனக் காட்டினால் தூங்குவது கடினமாகலாம். சோர்வும் தூக்கத்துக்கான உடலின் தயார்நிலையும் ஒன்றல்ல.


விண்வெளி வீரர்களுக்குத் தினமும் சுமார் 8.30 மணி நேரத் தூக்க வாய்ப்பு வழங்கப்பட்டாலும், பல பயணங்களில் அவர்கள் சராசரியாக 6 முதல் 6.30 மணி நேரமே தூங்குவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தில், தினமும் 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்கியவர்களின் விழிப்புணர்வும் தகவல்களைக் கவனித்துப் பதிலளிக்கும் திறனும் குறைந்தன. சிறிய தவறும் ஆபத்தாகும் விண்வெளியில், தூக்கம் பயணப் பாதுகாப்பின் முக்கிய அங்கம்.


தூங்குவதற்கென நேரம் ஒதுக்கப்படுவது மட்டுமே போதாது என்பதையும் இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன. அந்த நேரத்தில் உடல் தூக்கத்தை ஏற்கும் நிலையில் இருப்பதும், தொடர்ந்து போதுமான தூக்கம் கிடைப்பதும் அவசியம். ஆகவே, விண்வெளி வீரர்களின் அட்டவணையில் ஓய்வுக்கான இடத்தை உறுதிசெய்வதுடன், வெளிச்சமும் அன்றாடச் செயல்களும் உடலின் கடிகாரத்துடன் ஒத்துப்போகும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.


செயற்கை வெளிச்சம், உணவு, உடற்பயிற்சி, பணிநேரங்களைத் திட்டமிடுவது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும். தூங்குமுன் குறைவான நீல ஒளியுடன் கூடிய வெளிச்சம், மெலட்டோனின் சுரப்புக்கு ஏற்படும் தடையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், அத்தகைய வெளிச்சத்தில் நிறங்களை வேறுபடுத்துவது கடினமாகலாம். நிறக் குறியீட்டுக் கட்டுப்பாடுகளையும் எச்சரிக்கை விளக்குகளையும் அடையாளம் காணும்போது இது சிக்கலாகும்.


தூக்கக் குறைவின்போது காஃபீன் சில செயல்திறன்களை மேம்படுத்தலாம். எனினும், பின்னர் தேவைப்படும் தூக்கத்தையும் பாதிக்கலாம். தற்காலிகத் தீர்வே அடுத்த பிரச்சினைக்குக் காரணமாகலாம்.
அடுத்த சவால் செவ்வாய். அங்கு ஒரு நாள் சுமார் 24 மணி நேரம் 40 நிமிடங்கள். கூடுதல் 40 நிமிடங்கள் சிறியதாகத் தோன்றினாலும், தினமும் தூங்கும், விழிக்கும் நேரங்களைத் தள்ளிப்போடுவது உயிரியல் கடிகாரத்துக்குத் தொடர்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தும்.நாசாவின் ஓராண்டு செவ்வாய் பயண உருவகப்படுத்துதலில் பங்கேற்கும் நால்வர், செப்டம்பர் இறுதியில் பூமியின் அட்டவணையிலிருந்து செவ்வாயின் அட்டவணைக்கு மாறத் திட்டமிடப்பட்டது.

 ஹூஸ்டனிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நடைபெறும் இந்தத் திட்டம் அக்டோபர் 31-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்கள் செவ்வாயில் வாழும்போது, ‘ஜெட் லாக்’ என்பது நாடுகளின் நேர மண்டலங்களைத் தாண்டும் சிக்கலாக மட்டும் இருக்காது; ஒரு கிரகத்தின் நாளிலிருந்து மற்றொரு கிரகத்தின் நாளுக்கு உடலைப் பழக்கப்படுத்தும் சவாலாக இருக்கும்.


விண்வெளி வீரர்களின் தூக்கத்தைப் புரிந்துகொள்வது, பூமியில் இரவுப் பணி, நேர மண்டல மாற்றம், தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோருக்கும் உதவும். செவ்வாயின் கூடுதல் 40 நிமிடங்களைச் சமாளிக்கும் தேடல், பூமியில் நமது இரவுகளைச் சிறப்பாக்கும் வழியையும் காட்டக்கூடும்.

முந்தைய செய்தி
தங்கச் சுரங்கத்தில் விபத்து: 5 தொழிலாளர்கள் பலி
அடுத்த செய்தி
மாயமான விமானம் - 6 பேரை தேடும் பணி தீவிரம்!

தொடர்புடைய செய்திகள்