உலகின் முக்கிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை இறக்குமதி சந்தையாக உள்ள அமெரிக்காவில், இந்திய ஜவுளித் துறைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் உள்ளன. அதேவேளையில், சுங்கவரி மற்றும் வர்த்தகக் கொள்கை மாற்றங்களால் இந்தியாவின் ஏற்றுமதியில் சமீபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஜவுளி, ஆடை மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ல் ரூ.83,179 கோடியாக இருந்தது. 2024-25-ல் ரூ.92,571 கோடியாக அதிகரித்தது. இந்த நிலையில், 2025-26-ல் ரூ.85,910 கோடியாகக் குறைந்தது. அமெரிக்காவின் ஜவுளி, ஆடை மற்றும் ஆயத்தப் பொருட்கள் இறக்குமதி சந்தை சுமார் 118 பில்லியன் டாலர் மதிப்புடையதாக உள்ளது.
ஏற்றுமதியில் சரிவு
ஜனவரியில் அமெரிக்காவுக்கான இந்திய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 18.2 சதவீதம் சரிந்தது. பிப்ரவரியில் சரிவு 28.7 சதவீதமாக அதிகரித்தது. சுங்கவரி மற்றும் வர்த்தகக் கொள்கை மாற்றங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறன் பாதிக்கும் நிலை உருவாக்கி உள்ளது.
ஜனவரி-ஜூலையில் அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியில் வியட்நாம் முதலிடத்திலும், வங்கதேசம் இரண்டாமிடத்திலும் இருந்த நிலையில், இந்தியா 2.45 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியுடன் அடுத்த நிலையில் இருந்தது.
2025-26-ல் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1,39,350 கோடியாகவும், பருத்தி ஜவுளி ஏற்றுமதி ரூ.1,02,427 கோடியாகவும், செயற்கை இழை ஜவுளி ஏற்றுமதி ரூ.46,254 கோடியாகவும் இருந்தது. இதனால், வீட்டு உபயோக ஜவுளிகள், தொழில்நுட்ப ஜவுளிகள் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.
தமிழக ஏற்றுமதி வளர்ச்சி
2025 ஏப்ரல் முதல் 2026 ஜனவரி வரை தமிழகத்தின் ஜவுளி, ஆடை, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி ரூ.57,858 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட 3.3 சதவீத வளர்ச்சி பதிவானது. அமெரிக்க சந்தையின் தேவையைப் பயன்படுத்தி, ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளில் தமிழக நிறுவனங்கள் கவனம் செலுத்துவதால் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க முடியும்.
அமெரிக்க சந்தையில் வாய்ப்பு
அமெரிக்காவில் ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிகளில் படுக்கை விரிப்புகள், துண்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்ப ஜவுளிகளில் மருத்துவம், வாகனம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளுக்கான பொருட்களுக்கு தேவை உள்ளது. மேலும், விலை அடிப்படையிலான போட்டியைக் குறைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களில் கவனம் செலுத்துவதால், இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் தங்களது வாய்ப்பை அதிகரிக்க முடியும்.