தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசனம் அளித்து வரும் முல்லை பெரியாறு அணைக்கான நீர்வரத்து 2,488 கன அடியில் இருந்து 4,271 அடியாக அதிகரித்துள்ளது.
கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் 152 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 122 அடிக்கு மேல் உயரவில்லை. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அணையில் பயன்பாட்டு நீர் இருப்பு 2,583 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. அணையில் 26.8 மி.மீ, தேக்கடியில் 75.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.