ஸ்கைடான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பாரமவுன்ட், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை 8,100 கோடி அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை நிறைவு செய்தது. கடன்களையும் சேர்த்தால், இந்தப் பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு சுமார் 11,100 கோடி டாலராகும்.
அமெரிக்காவின் பழமையான இரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்துள்ளதால், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக ‘ஸ்கைடான்ஸ்’ உருவெடுத்துள்ளது. ஹெச்பிஓ மேக்ஸ், சிஎன்என், பாரமவுண்ட் பிளஸ், சிபிஎஸ் ஆகியவை ஒரே நிர்வாகத்தின்கீழ் வந்துள்ளன. ‘ஹாரி பாட்டர்’, ‘டாப் கன்’, ‘தி காட்ஃபாதர்’ உள்ளிட்ட திரைப்படங்களும் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இடம்பெறுகின்றன.
புதிய நிறுவனத்தை கோடீஸ்வரர் டேவிட் எலிசனும், இணை தலைமை செயல் அதிகாரி இனான் கிரீஸும் வழிநடத்தவுள்ளனர். கடந்த ஆண்டுதான் பாரமவுன்டை 800 கோடி டாலருக்கு ஸ்கைடான்ஸ் வாங்கியிருந்தது. வார்னரின் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இணைய ஒளிபரப்பு வணிகங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தது. பின்னர், வார்னர் நிறுவனத்தை முழுமையாக வாங்க பாரமவுன்ட் போட்டியிட்டது. ஒரு பங்குக்கு 31 டாலர் வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் விலகியது. பிப்ரவரி இறுதியில் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த இணைப்பால் வேலைவாய்ப்புகள் குறையும்; பார்வையாளர்களுக்கான தேர்வுகள் சுருங்கும் என ஆயிரக்கணக்கான திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜேன் ஃபோண்டா, மார்க் ரஃபலோ உள்ளிட்டோர் எதிர்ப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டனர். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்டோர் எலிசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஊடகத் துறையில் ஏற்கெனவே சில நிறுவனங்களிடம் அதிகாரம் குவிந்துள்ள நிலையில், இந்த இணைப்பு அதை மேலும் அதிகரிக்கிறது. ஸ்கைடான்ஸுக்கும் ஒட்டுமொத்த துறைக்கும் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று எலிசன் அறிக்கையில் தெரிவித்தார்.
சிஎன்என் செய்திகளைக் கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்துகளும் இந்தப் பரிவர்த்தனையின்போது கவனம் பெற்றன. சிஎன்என்னின் செய்தி ஆசிரியர் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என எலிசன் உறுதியளித்துள்ளார்.