வட, தென் கொரியாக்களின் எல்லையில் மீண்டும் பிரச்சார ஒலிபெருக்கிகளை இயக்க வடகொரியா தயாராகிவரும் நிலையில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், எல்லைப் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் ஒலிபெருக்கி பிரச்சார அறிவிப்பை வெளியிட்டார். அக்டோபர் மாதத்துக்குள் எல்லை முழுவதும் தென்கொரியாவுக்கு எதிரான பிரச்சார ஒலிபரப்பு தொடங்கும் என்றும், சில நாட்களில் ஒலிபெருக்கிகள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லையில் வடகொரிய வீரர்கள் மேற்கொள்ளும் பணிகளின்போது தென்கொரியா எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்துவதை அவர் கடுமையாக கண்டித்தார். தங்கள் வீரர்களுக்கோ, நாட்டின் பாதுகாப்புக்கோ பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
கடந்த மாதம் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவமற்ற மண்டலத்தில் கண்ணிவெடிகள் வெடித்து மூன்று தென் கொரிய வீரர்கள் காயமடைந்தனர். இதற்கு வட கொரியாவே காரணம் என தென்கொரியா குற்றம் சாட்டியது. வட கொரியா இதை மறுத்துள்ளது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைப் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் அரசு ஏற்கெனவே பிரசார ஒலிபரப்புகளை நிறுத்தியிருந்தது. தற்போது வடகொரியாவின் நடவடிக்கைக்கேற்ப உரிய பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென் கொரிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், மோதலை வளர்க்கும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் தென் கொரியா வலியுறுத்தியுள்ளது. எல்லையில் மீண்டும் ஒலிக்கவுள்ள பிரசாரக் குரல்கள், இருதரப்பு உறவில் நிலவும் விரிசலை மேலும் ஆழப்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளன.