தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 43 இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்ப உள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி ஆறு மற்றும் வைகை ஆறு ஆகியவற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04546-261093 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.