சோலார் பேனல்களை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும் சிப் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் திட்டத்துக்காக ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 21,900 டன் கழிவுகளைப் மறுசுழற்சி செய்யும் வகையில் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்த ஆலையில், 2026-ம் நிதியாண்டு நிலவரப்படி, சுமார் 13,100 டன் சூரிய மின்தகடு கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுகளிலிருந்து சுமார் 95 சதவீதப் பொருட்களை மீட்டெடுக்கும் திறனை நிறுவனம் எட்டியுள்ளது.
இந்த மறுசுழற்சி செயல்முறையில் கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மீட்கப்படும் கண்ணாடி, கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.சிப் உள்ளிட்ட பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டு, புதிய சூரிய மின்தகடுகள் தயாரிக்க மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள் குறைவதுடன், புதிய மூலப் பொருட்களைச் சார்ந்திருப்பதும் குறைகிறது. இந்த திட்டம், சூரிய மின்தகடு உற்பத்தியில் மறுசுழற்சியை ஒருங்கிணைத்து, உள்நாட்டு உற்பத்தித் துறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான முன்னுதாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.