சென்னை
தமிழக தேர்தல் களத்தில் பொதுத்தேர்தலுக்கும், இடைத்தேர்தலுக்கும் வாக்குகள் பதிவாகும் சதவீதம் தொடர்ந்து மாறுபட்டு வந்துள்ளது. வேட்பாளர் மறைவு உள்ளிட்ட காரணங்களால், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்போது, அரசியல் கட்சிகள் கூடுதல் கவனத்தோடு, அந்த தேர்தலை அணுகும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பொதுத்தேர்தலைப் போல் அல்லாமல், ஒவ்வொரு வாக்காளரையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நேரில் சந்தித்து வாக்குகளை கேட்கும் வாய்ப்பு வேட்பாளர்களுக்கு கிடைக்கிறது. அதோடு, தமிழகத்தில் இடைத்தேர்தல் என்பது திருவிழா போல் நடந்து வருகிறது.
வாக்குக்கு பணம், பரிசு, அசைவ விருந்து என வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளை அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் பயன்படுத்துகின்றன. அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில், வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு போக்குவரத்து செலவுக்கு பணம் கொடுத்து வரவழைத்து, வாக்களித்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், வரும் 6-ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளதுடன், தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.
இடைத்தேர்தல் நடக்கவுள்ள மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள், பொதுத்தேர்தலின்போதே ஆர்வத்தோடு வாக்களித்துள்ளனர். அதனால், இந்த தொகுதியில் 93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, தாராபுரம் தொகுதியில் பொதுத்தேர்தலின்போது 89 சதவீத வாக்குகள் பதிவாகின. தற்போதைய இடைத்தேர்தலில் இந்த சதவீதம் உயர்ந்து, புதிய சாதனையை வாக்காளர்கள் படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் கூறியதாவது: மதுராந்தகம் தொகுதியில் 2.12 லட்சம் வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2.22 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவுக்குத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது. 85 வயதைக் கடந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலின்போது இந்த இரு தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். எனவே, இடைத்தேர்தலில் கூடுதலாக வாக்குகள் பதிவாகும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பெட்டிச்செய்தி – வரைபடம்
15 ஆண்டு இடைத்தேர்தல் வரலாறு
ஆண்டு - வாக்குப்பதிவு சதவீதம்
2011 - திருச்சி மேற்கு - 61.12
2012 சங்கரன்கோவில் - 77.52
புதுக்கோட்டை - 73.48
2013 ஏற்காடு - 89.16
2014 ஆலந்தூர் - 64.27
2015 ஸ்ரீரங்கம் - 81.80
2016 திருப்பரங்குன்றம் - 70.89
2017 ஆர்.கே. நகர் - 77.68
2019 பூந்தமல்லி 77.06
பெரம்பூர் - 64.30
திருப்போரூர் - 80.23
சோளிங்கர் - 82.34
குடியாத்தம் - 75.23
ஆம்பூர் - 76.85
ஓசூர் - 69.87
பாப்பிரெட்டிப்பட்டி - 84.84
அரூர் - 83.67
நிலக்கோட்டை - 80.29
திருவாரூர்- 69.21
தஞ்சாவூர் -69.16
மானாமதுரை - 74.54
ஆண்டிப்பட்டி - 77.08
பெரியகுளம் - 73.98
சாத்தூர் -77.01
பரமக்குடி - 71.30
விளாத்திகுளம் – 75.65
அரவக்குறிச்சி - 84.28
சூலூர் - 76.89
திருப்பரங்குன்றம் - 74.19
ஓட்டப்பிடாரம் -72.67
விக்கிரவாண்டி - 84.36
நாங்குநேரி - 66.35
2023 ஈரோடு கிழக்கு - 74.79
2024 விளவங்கோடு - 65.40
விக்கிரவாண்டி 82.48
2025 ஈரோடு கிழக்கு 67.97