நாகை:
டெங்கு பாதிப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், அடுத்த 15 நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் தமிழக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை கால முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்புப் பணிகளைப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அரசு மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சலுக்கான 'ஒசெல்டமிவிர்' மாத்திரைகள், டெங்கு சிகிச்சைக்கான ஐவி திரவங்கள், ஓ.ஆர்.எஸ் கரைசல்கள் மற்றும் கொசுவலைகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், ஒட்டுண்ணி காய்ச்சலுக்கான 'டாக்ஸிசைக்ளின்' மாத்திரைகள், கொசுப்புழுக்களை அழிக்கும் 'டெமிபாஸ்' மற்றும் புகை மருந்து தேவையான அளவு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்குச் சுமார் 200 டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 10 முதல் 15 நாட்களாக இந்த எண்ணிக்கை சீராக நீடித்து வரும் நிலையில், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அடுத்த 15 நாட்களில் பாதிப்புகள் மேலும் குறையும் என்றார்.