தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில், தெப்பக்குளங்களின் நீர் வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளைச் சரிசெய்து சீரமைக்க வேண்டும். கோயில் வளாகத்திற்குள் மழைநீர் தேங்கினால், அதனை உடனுக்குடன் வெளியேற்ற மின் மோட்டார்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயில் கோபுரங்கள் மற்றும் மேற்கூரைகளில் உள்ள மழைநீர் வடிகால்களை அடைப்புகளின்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கோயில் கோபுரங்கள் மற்றும் தேர் நிறுத்தப்பட்டுள்ள கொட்டகைகளில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் முறையாகச் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இடி, மின்னலின்போது எவ்வித மின்கசிவும் ஏற்படாத வண்ணம் மின் இணைப்புகளைப் பரிசோதித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கோயிலின் வெளியில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்களைப் பாதுகாப்பாக உள்ளே கொண்டு வர வேண்டும். அனைத்து உண்டியல்களும் மழையில் நனையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.