மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆளும் தவெக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த தொகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். இளைஞர்களுக்காக ரூ.3 கோடியில் அறிவுசார் மையமும், கருங்குழியில் ரூ.80 லட்சத்தில் மினி விளையாட்டு மைதானமும் அமைக்கப்படும்.
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு, 6 புதிய நெல் கொள்முதல் நிலையங்கள், ஆத்தூரில் ரூ.20 கோடியில் 20,000 டன் கொள்ளளவு நெல் சேமிப்புக் கிடங்கு, ரூ.10 கோடியில் 25 ஏக்கரில் மாநில விதைப் பண்ணை, அத்திமனத்தில் ரூ.5 கோடியில் தடுப்பணை, மதுராந்தகம் ஏரியில் சுற்றுலாப் பூங்கா, பெண்களுக்கான தங்கும் விடுதி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் ரூ.1,439 கோடியில் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்குக் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், 271 கி.மீ. நீளத்துக்குப் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படும். மூலனூரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி
நிலையமும் அமைக்கப்படும்.
தாராபுரம் நகராட்சியில் குடிநீர், தெருவிளக்குகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் மேம்படுத்தப்படும். இந்த 2 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.