ரூ.13,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் விஜயுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். அப்போது முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் 2வதாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு கொடுத்தார். இதைத்தொடர்ந்து வரவேற்புரை கொடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடி தொடர்ந்து 25 ஆண்டுகள் பொதுசேவையில் நீடித்து வருவதாக புகழாரம் சூட்டினார். மேலும் தமிழகத்துக்கு இதுவரை ரூ.15 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 12 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முதல்வர் விஜய், “தனித்துவம் மிக்க மாநிலம் தமிழ்நாடு. உலகின் தொன்மையான மொழியான தமிழை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு மக்கள் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன். பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. மக்கள் நலனே முக்கியம். ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் அதன் பலன் மக்களை சென்றடையும். வளர்ச்சியின் பயன் சென்னையை தாண்டியும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் 3ஆம் கட்ட திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக கருதி நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட ரூ. 13,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் விஜய் கையை பிடித்து இழுத்து ரிமோட் மூலம் அழுத்தி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 ரயில்வே மேம்பாலங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் சரக்குகளை சேமிக்க மற்றும் கையாள்வதற்கான வசதியை தொடங்கி வைத்தார். மணலி சுத்தகரிப்பு ஆலையில் ரூ.1,620 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.