தூத்துக்குடியில் ரூ.17,000 கோடியில் கப்பல் கட்டும் தளத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடி ஐஐடியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.13000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “2014 ஆம் ஆண்டு 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. 250 கி.மீக்கு மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. தற்போது 1,100 கி.மீக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மக்களின் போக்குவரத்து நன்றாக இருக்க வேண்டும். போக்குவரத்துத் துறையை மேம்படுத்தினால் மக்களின் வாழ்க்கை எளிதாகும். சிறப்பான போக்குவரத்துக்கு சாலையை விரிவாக்கம் செயதால் மட்டும் போதாது. உட்கட்டமைப்பு முக்கியம்.
முதல்வராக இருந்தபோது கலைஞர், ஜெயலலிதா உடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் நிறைய உரையாடி உள்ளேன். பிரதமராக ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இணைந்து வளர்ச்சிக்காக செயல்படுகிறேன். விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவோம்.

மாநிலங்களை சக்தி படைத்தவையாக மாற்றி, தேசத்தை சக்திபடைத்தவையாக மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஊக்குவிக்க வேண்டும். செல்போன் உற்பத்தியில் 2வது நாடாக உயர்ந்து மின்னணு பொருட்கள் உற்பத்தி 16 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி துறையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பலமான உற்பத்தி துறைக்கு சாலை வசதி, துறைமுகங்கள் தேவை. நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பல் கட்டுமானத்தில் தமிழ்நாட்டுக்கு சரித்திரம் வாய்ந்த பங்கு இருக்கிறது. தூத்துக்குடியில் ரூ.17,000 கோடியில் கப்பல் கட்டும் தளத்தை நவீனமயமாக்கும் மற்றும் விரிவுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு உதவி புரிந்து வருகிறது.
நாட்டின் குடிமக்கள், கூட்டுறவு கூட்டாட்சி மீதான நம்பிக்கை மேலும் வலுப்பட்டு வந்துள்ளது. மொபைல் உற்பத்தியில் உலகின் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. பாதுகாப்புத் துறையில் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் சிறப்பை கொடுக்கும்.
சிகரஙக்ளை தொடும் தமிழ்நாட்டை உருவாக்க மத்திய அரசு விருப்பம் கொள்கிறது. தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.