மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தவெக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாமகவின் ஆதரவைப் பெற தவெக வியூகம் வகுத்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள விசிக, கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என மிரட்டல் விடுத்துள்ளது.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 107 தொகுதிகளில் வென்ற தவெக, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் இடதுசாரிக் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இடதுசாரிகள் தவெக அரசில் பங்குபெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர்.
தவெக அரசின் மீது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விமர்சனத்தை முன்வைத்த ‘தோழர்கள்’, கூட்டணியை வலுப்படுத்த முதல்வர் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
இதன் உச்சமாக, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், தங்களது வேட்பாளர்களை நிறுத்தி, எதிர்ப்பு நிலையை உறுதியாக்கினர். பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்புக் கொடுத்ததில் தொடங்கி, வாக்குக்கு தவெக பணம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு வரை இடைத்தேர்தல் களத்தில் இடதுசாரிகள் எழுப்பிய விமர்சனக் குரல் தவெகவுக்கு எதிராக ஒலித்தது.
இடைத்தேர்தலில் தவெக வென்ற நிலையில், இடதுசாரி வேட்பாளர்கள் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றனர். இந்நிலையில், தவெக ஆட்சிக்கான ஆதரவை இடதுசாரிகள் தொடர்வார்களா என்பது தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தவெக அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இடதுசாரிகள் விலகினால், அவர்களால் குறையும் 4 எம்எல்ஏக்களை, பாமக மூலம் சரி செய்யலாம் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் வென்ற பாமக, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததில் தொடங்கி, இடைத்தேர்தலில் தங்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது வரை அன்புமணியின் ‘பாசிட்டீவ் அப்ரோச்’ முதல்வருக்கு பிடித்துள்ளது.
அதேநேரத்தில், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விசிகவின் செயல்பாடுகளில் கிடைத்த அனுபவம் மற்றும் தவெக ஆட்சி அமைய எஸ்ஐஆர் பணிகள் காரணம் என்ற திருமாவளவனின் சமீபத்திய கருத்தும் தவெக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கூட்டணிக்குள் பாமக வருமானால், விசிக வெளியேறும். தற்போதைய இடைத்தேர்தல் வெற்றியால் கிடத்த இரு எம்எல்ஏக்கள் பலத்தால் இதை சமாளித்துக் கொள்ளலாம் என்று தவெக கருதுகிறது. தவெகவின் இந்த வியூகத்தை உணர்ந்துள்ள திருமாவளவன் “தவெக கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தை சிதைக்க பார்க்கின்றனர். இடைத்தேர்தலில் பாமகவின் வாக்குகள், தவெகவுக்கு வந்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்” என திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் வன்னியரசு, “தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும்” என வெளிப்படையாக அறிவித்தார்.
பாமகவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பான எந்த சிக்னலும் தவெக தரப்பில் இருந்து வெளிப்படையாக வரவில்லை. ஆனால், தவெகவின் வியூகத்தை உணர்ந்த காரணத்தால்தான், விசிக முந்திக்கொண்டு எதிர்வினையாற்றியுள்ளது.
காலியாக உள்ள 5 தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தங்களது பலத்தை 114-ஆக உயர்த்திக் கொள்ளும் வரை, கூட்டணிக் கட்சிகளை சமாளிக்க புதிய வியூகங்களை வகுக்க தவெக தயாராக வைத்துள்ளது என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தவெக கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தை சிதைக்க பார்க்கின்றனர். இடைத்தேர்தலில் பாமகவின் வாக்குகள், தவெகவுக்கு வந்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்: திருமாவளவன்
- தவெக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும்: அமைச்சர் வன்னியரசு