இந்தியாவில் ஆண்டுக்கு 1,49,110 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் சுமார் 23,130 கோடி முட்டைகள் நாட்டுக்கோழி மற்றும் புறக்கடை கோழி வளர்ப்பு மூலமும், மீதமுள்ள பெரும்பகுதி வணிக ரீதியிலான முட்டைக்கோழிப் பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முதல் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை அடிப்படையில் முட்டை விற்பனை நடைபெறுகிறது.பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மஸ்கட், துபாய் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வணிக ரீதியிலான முட்டைக்கோழிப் பண்ணைகள் அதிக அளவில் முட்டைகளை உற்பத்தி செய்யும் அதேவேளையில், கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி மற்றும் புறக்கடை கோழி வளர்ப்பு மூலம் கிடைக்கும் முட்டைகளுக்கும் தனித்துவமான சந்தை உள்ளது.
தமிழகத்தில் மொத்த முட்டை உற்பத்தி 23.30 பில்லியன். நாமக்கல் மண்டலம் உள்ளிட்ட வணிக ரீதியான பண்ணைகளின் பங்கு 95 சதவீதமாகும். மீதமுள்ள 5 சதவீதம் கிராமப்புற சிறிய, நடுத்தர அளவிலான நாட்டுக் கோழி பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் வணிகக் கோழிப்பண்ணைத் தொழிலுடன் பாரம்பரிய நாட்டுக்கோழி வளர்ப்பையும் ஊக்குவிப்பது கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனக் கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் பாரம்பரிய ரகங்களுடன், வனராஜா, கிரிராஜா, கிராமப்பிரியா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட ரகங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராமப்புறங்களில் குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளப்படுவதால் வாழ்வாதாரம், ஊரகப் பொருளாதாரத்துக்கும் துணைபுரிகிறது.
மாநிலம் வாரியாக
மேற்கு வங்காளம் 10.80 பில்லியன் (நாட்டுக்கோழி, வாத்து முட்டை)
அசாம் - 2.10 பில்லியன்
பீகார் - 1.85 பில்லியன்.
கேரளா - 1.45 பில்லியன்.
ஆந்திரா - 1.30 பில்லியன்.
தமிழ்நாடு - 1.15 பில்லியன்.
ஒடிசா, ஜார்கண்ட் - 1.60 பில்லியன்.