சென்னை:
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, 4-ம் தேதி மாலை 6 மணி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு தொடர்பில்லாத, வாக்காளர் அல்லாத வெளியூரைச் சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு இன்று மாலையுடன் வெளியேற வேண்டும்.
திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது ஆணையத்தால் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர், தேர்தல் முகவர், தேர்தல் பணியாளர் ஆகியோருக்கு தலா ஒரு வாகனம் இயக்க அனுமதி வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கு வாகனங்களை ஏற்பாடு செய்யக் கூடாது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.