நரம்பியல் பன்முகத்தன்மை மற்றும் மாற்றுத் திறனுடையோர், தங்கள் அன்றாடப் பணிகளைச் சுயமாகச் செய்ய உதவும் வகையில் 'ஜாது என்னும் செயலியை ரீவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாது நிறுவனர் விஜய் கருணாகரன் இதை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: ஆட்டிஸம் , டிஸ்லெக்ஸியா, மூளை முடக்குவாதம் போன்ற நரம்பியல் குறைபாடு உள்ளவர்களுக்காகவும், டிமென்ஷியா, பார்கின்சன் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்காவும் முழுமையான மறுவாழ்வு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாட்டுத் தளமாக 'ஜாது' உருவாக்கப்பட்டுள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எனது தாயார் அன்றாட வாழ்வை எதிர்கொள்ள சிரமப்பட்டார். இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க எனக்கு உந்துதலாக அமைந்தது. ஏஐ, மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் சென்சார்கள் மூலம் பாதுகாப்பான சூழலில் மாற்றுத் திறனாளிகள் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழத் தேவையான பயிற்சிகளை ஜாது தளம் வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலர் மதுமதி பேசும்போது, "மாநிலம் முழுவதும் வீடு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 9 லட்சம் பேருக்கு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த தாமதங்களை 11 மாதங்கள் வரை காத்திருக்காமல், தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்" என்றார்.