இந்தியாவில் உயர் புரதப்பாலுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், 25 கிராம் புரதச்சத்து கொண்ட 250 மி.லி. அளவிலான, லாக்டோஸ் இல்லாத உயர் புரதப்பாலை ‘ஹை புரோட்டீன் லாக்டோஸ் ஃப்ரீ மில்க்’ என்ற பெயரில் மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்ட மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனம், பனீர், சீஸ், வெண்ணெய், நெய் , யோகர்ட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 22 பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பால் மற்றும் உணவுப் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் உயர் புரத உணவுப் பொருட்களுக்கான தேவை கடந்த 2 ஆண்டுகளாக 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, உயர் புரதம் கொண்ட பனீர், கிரீக் யோகர்ட் மற்றும் ஸ்கைர் (Skyr) போன்ற பொருட்களுக்கு நுகர்வோரிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, உயர் புரதப் பால் மூலம் இந்தச் சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, 250 மி.லி. பாக்கெட்டில் புதிய உயர் புரதப்பாலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 25 கிராம் புரதச்சத்து உள்ளது. லாக்டோஸ் இல்லாத இந்தப் பால், அன்றாட உணவில் அதிக புரதச்சத்தைச் சேர்த்துக்கொள்ள விரும்பும் நுகர்வோரைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை மூலம் சந்தைப்படுத்தப்படும் இந்தப் பொருளின் விநியோகம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாலைத் தயாரிக்க அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் (Ultra-filtration) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சிறப்பான வடிகட்டுதல் முறையின் மூலம் பாலில் புரதச்சத்தை அதிகரிக்கும் இந்தத் தொழில்நுட்பம், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பொருளில் கூடுதலாகப் புரதத்தைச் சேர்க்கும் முறையிலிருந்து மாறுபட்டதாகும்.
இதுகுறித்து மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.ரத்தினம் கூறும்போது, "உயர் புரதம் கொண்ட பால் பொருட்கள், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஊட்டச்சத்தும், எளிமையான பயன்பாடும் இணைந்த பொருட்களை நுகர்வோர் அதிகளவில் எதிர்பார்க்கின்றனர்.
இந்த மாற்றத்துக்கு ஏற்ப புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன், உயர் மதிப்பு கொண்ட பால் பொருட்கள் பிரிவையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய், முந்தைய ஆண்டு இதேகாலத்தோடு ஒப்பிடுகையில் 44 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.973.45 கோடி ஈட்டியிருந்தது. மேலும், நிகர லாபம் 9 மடங்கு வளர்ச்சியுடன், ரூ.65 கோடியாக அதிகரித்துள்ளது.