சென்னை:
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.முந்தைய திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, வெற்றிப் பயணத் திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் விஜய் துவக்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் தினமும் 12,600-க்கும் மேற்பட்ட சாதாரண, எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும், வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசின் வெற்றிப் பயண திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமை மீறும் செயல் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வெற்றிப் பயணத் திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ரூபாயை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனது வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயணத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், ஈரோட்டில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஒட்டுமொத்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.