மதுரை ஓபுளா படித்துறையில் இயங்கிவரும் வாழைத்தார் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் மொத்தம், சில்லரை வியாபாரிகள் வாழைத்தார் வாங்குவதற்கு நாள்தோறும் ஓபுளா படித்துறை சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்களுக்கு தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. ஆனால், தற்போது ஆயுத பூஜை முடிந்தும் வாழைப்பழ விலையில் பெரிய மாற்றமில்லை. இதுகுறித்து வாழைப்பழ வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் கூறியதாவது:
ஓபுளா படித்துறை சந்தையில் இருந்து நாள்தோறும் சுமார் 20 டன் வாழைத்தார்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிலவிய கடுமையான வெயில் மற்றும் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் வாழைப்பழங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்களுக்கு குறிப்பாக `நாடு’ வகை வாழைப்பழத்திற்கு தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. தற்போது நவராத்திரி, ஆயுத பூஜை முடிந்தும் வாழைத்தார் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
செவ்வாழை மட்டும் (ஒரு தார்) ரூ.1,200-ல் இருந்து ரூ.1000 ஆக சரிந்துள்ளது. மற்ற வகை வாழைப்பழங்களின் விலையில் மாற்றம் இல்லை. வரத்து குறைவாக உள்ளதால் அடுத்த 2 வாரங்களுக்கு வாழைப்பழ விலை குறைய வாய்ப்பில்லை இவ்வாறு அவர் கூறினார்.