வேலூர் சண்டே மார்க்கெட்டில் பழைய நாணயங்கள் ஒன்று ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இளம் தலைமுறையினர் பழைய நாணயங்களை ஆச்சரியத்துடன் பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.
வேலூரில் லாங்க் பஜார் என்று அழைக்கப்படும் கிருபானந்த வாரியார் சாலையில் சண்டே மார்க்கெட் புகழ் பெற்றது. இந்த மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இயங்குகிறது. இங்கு சாதாரண போல்ட், நட்டு முதல் வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் நாம் தேடினாலும் கிடைக்காத பொருட்கள் இங்கு சென்றால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் செல்கின்றனர்.
குறிப்பாக பழங்கால நாணயங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரையணா, நாலணா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா என அலுமினிய, சில்வர் நாணயங்கள் உள்ளது. இங்கு ஒரு நாணயம் ரூ.20 க்கு விற்பனை செய்கின்றனர்.
சிலர் இதனை சேமித்து வைக்கும் வகையில் தங்களது வீட்டில் இல்லாத நாணயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பலர் தங்களது குழந்தைகளிடம் நாம் முன்னோர்கள் இந்த நாணயங்களை பயன்படுத்தினர். இதற்கு என்ன மதிப்பு என்றும் சொல்லித் தருகின்றனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டே மார்க்கெட் வேலூரில் எந்தவித தொய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.