பயிர்க்கடன் தள்ளுபடி கோரி திருச்சியில் போராட்டம் நடத்திவரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடன் தள்ளுபடியில் தமிழக அரசு உச்சபட்ச வரம்பு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் மொத்த கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னையில் 50 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ரமேஷ், வினோத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் கூறியதாவது: மேலும் சில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். எனவே, இன்றும் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்பின்னர் விவசாயிகள் எதிர்பார்க்கும் வகையில் கடன் தள்ளுபடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறுவதால், அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று, விவசாய சங்கத் தலைவர்கள் மட்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவும், மற்ற விவசாயிகள் திட்டமிட்டபடி போராட்டத்தைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.