எத்தனால் தயாரிப்புக்கான தேவை அதிகரித்ததால் மக்காச்சோள விலை கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. டன்னுக்கு சுமார் ரூ. 14,000 ஆக இருந்த விலை, தற்போது ரூ. 26,500-27,000 வரை உயர்ந்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 20% (E20) அளவை எட்டியதால், மக்காச்சோளம் மற்றும் கரும்பு சார்ந்த எத்தனால் உற்பத்திக்கான தேவை அதிகரித்துள்ளது. தானிய அடிப்படையிலான உற்பத்தி மொத்த எத்தனாலில் சுமார் 69 சதவீதமாக உள்ளது. அதில், மக்காச்சோளம் மட்டும் பாதிப் பங்கை வகிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்காச்சோள உற்பத்தி சுமார் 4.34 கோடி டன்; இதில் கிட்டத்தட்ட 1.7 கோடி டன் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோள அடிப்படையிலான எத்தனால் உற்பத்தி 2022-ல் சுமார் 10 லட்சம் டன்னாக இருந்தது; தற்போது சுமார் 17 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறுகையில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, பல ஆண்டுகளாக குறைந்த விலை கிடைத்த நிலையில் மக்காச்சோள விலை உயர்வு பெரும் நிவாரணம். எத்தனால் தேவை புதிய சந்தையை உருவாக்கி, விவசாயிகளுக்கு பலன் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10.13 லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டு உற்பத்தி 28 லட்சம் டன். மேலும், 1.87 லட்சம் ஏக்கரில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 79,000 விவசாயிகள் பயனடையவுள்ளனர்.
தீவன பற்றாக்குறை அபாயம்
கோழி உணவின் முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளம், கடந்த ஒரு ஆண்டில் கிலோவுக்கு சுமார் ரூ. 22-லிருந்து ரூ. 30 வரை உயர்ந்துள்ளது; இது சுமார் 36 சதவீதம் உயர்வாகும். இதனால் நாமக்கல் உள்ளிட்ட கோழி வளர்ப்பு மையங்களில் தீவனச் செலவு அதிகரித்துள்ளது.
விலை உயர்வின் நன்மை வர்த்தகர்கள் மற்றும் செயலாக்க நிறுவனங்களுக்கு மட்டும் சென்றுவிடாமல், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும் என்றார்.
மக்காச்சோளத்திற்கான அரசு கொள்முதலை விரிவாக்கவும், சந்தை வசதிகளை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.