ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் ரூ.1,000 கோடி திரட்ட, தனது பங்குதாரர்களுக்கு உரிமைப் பங்குகளை வெளியிடுகிறது. ஒரு பங்கின் விலை ரூ.27. இதற்காக அக்டோபர் 22 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பங்குகளை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். அவர்களிடம் உள்ள ஒவ்வொரு 25 பங்குகளுக்கும், இரண்டு புதிய பங்குகளை வாங்கலாம். இதுவே உரிமைப் பங்கு வெளியீடு என்று அழைக்கப்படுகிறது.உதாரணமாக, ஒருவரிடம் 100 பங்குகள் இருந்தால், அவர் எட்டு புதிய பங்குகளை வாங்கலாம். இதற்கான தகுதியை முடிவு செய்யும் நாள் அக்டோபர் 13. இந்த வாய்ப்பைப் பெற (அக். 12) நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும்.
மொத்தம் சுமார் 37.03 கோடி புதிய பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. அனைத்துப் பங்குகளும் வாங்கப்பட்டு, முழுப் பணமும் செலுத்தப்பட்டால் நிறுவனத்துக்கு ரூ.999.74 கோடி கிடைக்கும்.
ஒரு பங்கின் அடிப்படை மதிப்பு ரூ.10. அதற்கு மேல் ரூ.17 சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, வாங்குபவர்கள் ஒரு பங்குக்கு மொத்தம் ரூ.27 செலுத்த வேண்டும்.
இந்தப் பணத்தை ஒரே நேரத்தில் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்போது ஒரு பங்குக்கு ரூ.16.20 செலுத்தினால் போதும். மீதமுள்ள ரூ.10.80-ஐ நிறுவனம் பின்னர் அறிவிக்கும் நாளில் செலுத்த வேண்டும்.
மீதிப் பணத்தை வசூலிக்கும் நடவடிக்கை அக்டோபர் 31, 2027-க்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணம் செலுத்தும் தேதிகளை விதிகளின்படி மாற்ற நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது.
புதிய பங்குகளை வாங்கும் உரிமையைப் பங்குச்சந்தையில் மற்றவர்களுக்கு விற்கலாம். அதற்கான கடைசி நாள் அக்டோபர் 26. உரிமை கிடைத்தவுடன் பங்குகள் தானாகக் கிடைக்காது. விண்ணப்பித்து, பணம் செலுத்திய பிறகே பங்குகள் வழங்கப்படும்.
திரட்டப்படும் பணத்தில் சுமார் ரூ.350 கோடி கடனை அடைக்கவும், ரூ.400 கோடி தொழிலை வளர்க்கவும் பயன்படுத்தப்படும். மீதிப் பணம் நிறுவனத்தின் பொதுத் தேவைகளுக்குச் செலவிடப்படும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் பெரிய நிறுவன முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை விற்று ரூ.780 கோடி திரட்டியிருந்தது. இப்போது தனது பங்குதாரர்களிடமிருந்தும் பணம் திரட்டுகிறது. இந்தப் பங்கு வெளியீட்டுக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு அக்டோபர் 7-ம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.