கோயம்புத்தூர்
2031-ம் ஆண்டுக்குள் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) உற்பத்தி இலக்கை நோக்கை கோவை பம்ப் மற்றும் மோட்டார் உற்பத்தி துறை வேகமாக முன்னேறி வருகிறது.இந்தியாவின் பம்ப் மற்றும் மோட்டார் உற்பத்தியின் தலைநகராகத் திகழ்கிறது கோயம்புத்தூர். பம்ப் உற்பத்தியில் 40 சதவீதத்திற்குள் அதிகமாக கோவை பங்களிக்கிறது. விவசாயம், குடிநீர் பம்புகள், அனல்மின் நிலையங்கள், சுரங்கங்களுக்கான ‘ஸ்லரி பம்புகள்’, தொழிற்சாலைகள், கழிவுநீர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கான நவீன பம்புகளை கோவை தொழில் துறையினர் உற்பத்தி செய்கின்றனர்.
மேலும், பம்ப்-களின் சர்வதேச தரத்தை உறுதி செய்ய 50 வாட் முதல் 500 கிலோவாட் வரையிலான பரிசோதிக்கும் தானியங்கி சோதனை மையம் கோவையில் செயல்படுகிறது. தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) போன்ற அமைப்புகளும், மத்திய அரசின் ரூ.13 கோடி நிதியுதவியும் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளும் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பிஎம்-கேஎஸ்யுஎம் திட்டம்
சோலார் பம்புகளுக்கு மத்திய அரசு 30 சதவீதம் நிதியுதவியும், மாநில அரசு 30 சதவீத மானியமும் வழங்குகின்றன. இது அதிதிறன் கொண்ட பிஎல்டிசி சோலார் பம்புகளின் தேவையை உயர்த்தியுள்ளது. பம்ப் உற்பத்தியாளர்கள் தொழிலை விரிவாக்க பிணையில்லா கடன் பெற உதவும் வகையில், கடன் உத்திரவாத வரம்பை ரூ.10 கோடி வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மூலதன மானியங்களும் கிடைக்கின்றன.
குறைபாடுகள் இல்லாத உற்பத்தி முறையைப் பின்பற்றும் பம்ப் நிறுவனங்களுக்கு 80 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு, சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற உதவுகிறது.
மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகத்தின் உதவியுடன் ஸ்மார்ட் பம்புகளுக்கான ஆராய்ச்சி மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு வரிகள் மற்றும் சுங்கக் கட்டணங்களைத் திரும்பப் பெறும் சலுகைகளும் உள்ளன.
தற்போது தொழில் துறை பம்புகளுக்கான உள்நாட்டுத் தேவையில் 60-70 சதவீதத்தை கோவை பூர்த்தி செய்கிறது. 60.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு 1-2 சதவீதம் மட்டுமே. சீமா தலைவர் மா.செந்தில்குமார் கூறும்போது, "கோவை பம்ப் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலராக (சுமார் ரூ.50,000 கோடி) உயர்த்துவதே முக்கிய இலக்கு. மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5-ஆக குறைக்க வேண்டும்"என்றார்.