2027-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் குடிமைப் பணிகள் (யுபிஎஸ்சி) முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கு 525 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மையத்தில் முழு நேரப் பயிற்சிக்கு 225 பேரும், பகுதி நேரப் பயிற்சிக்கு 100 பேரும் தேர்வு செய்யப்படுவர். மதுரை மற்றும் கோயம்புத்தூர் மையங்களில் முழுநேரப் பயிற்சிக்கு தலா 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2026-ம் ஆண்டு ஊக்கத்தொகைத் திட்ட மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் www.civilservicecoaching.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
இந்த கலந்தாய்வின்போது, அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்படும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 28-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.