ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், சென்னை உள்ளிட்ட 8 முக்கிய இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்காக, அக்டோபர் 15 முதல் புதிய முன்பதிவு முறையைத் தொடங்குகின்றன.
சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே பயணம் செய்யும் விமானப் பயணிகளுக்காக , ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தங்களின் கூட்டு வணிக ஒப்பந்தத்தை விரிவுபடுத்தியுள்ளன. இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதன் மூலம் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய 8 முக்கிய இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர 126 விமானச் சேவைகளும் இந்த புதிய வசதியின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
பொதுவாக இரு விமான நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்தின்படி, ஒரு நிறுவனத்தின் இணையதளத்தில் மற்றொரு நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆனால், இதுவரை இதில் இருதரப்பிலும் ஒரு கட்டுப்பாடு இருந்து வந்தது. அதாவது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தளத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு டிக்கெட் எடுக்க வேண்டுமென்றால், ஒட்டுமொத்தப் பயணத்தில் ஒரு விமானமாவது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினுடையதாக இருக்க வேண்டும்;
அதேபோல ஏர் இந்தியா தளத்தில் டிக்கெட் எடுக்கும்போது அதில் ஒரு விமானமாவது ஏர் இந்தியாவுடையதாக இருக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இருந்தது. தற்போது இந்தக் கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இனி பயணிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைய தளத்திலேயே தனி ஏர் இந்தியா விமானத்திற்கும், அதேபோல் ஏர் இந்தியா இணையதளத்திலேயே தனி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கும் நேரடியாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.