சென்னை:
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முந்தைய திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் விடியல் பயணத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தவெக ஆட்சி அமைந்த பிறகு இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தி, வெற்றிப் பயணத் திட்டம் என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசின் வெற்றிப் பயணத் திட்டம் காரணமாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் இழப்பை சந்தித்து, தொழிலைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகும் எனவும் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமை மீறும் செயல்.
வெற்றிப் பயணத் திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு ரூ.6,000 கோடியை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
தனது வழக்கு முடியும் வரை, வெற்றிப் பயணத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கலாமணி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், இன்று விசாரணைக்கு வரவுள்ளது.