சிறைத் துறைக்கு சொந்தமான நிலத்தில், ரூ.302 கோடி மதிப்பில், 8 தளங்களுடன் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2024-ல் தொடங்கப்பட்ட நூலகத்தின் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
நூலகத் திறப்பு விழாவுக்காக முதல்வர் விஜய் நேற்று காலை தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காந்திபுரம் வந்த முதல்வர் விஜய்க்கு, வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நூலகத்துக்கு வந்த முதல்வருக்கு, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ராஜ்மோகன், சம்பத், விக்னேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். நூலகத்தை தொடங்கிவைத்த முதல்வர் விஜய், ஒவ்வொரு தளமாகச் சென்று பார்வையிட்டார். நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடந்த விழாவில், பல்வேறு துறைகளில் முடிவுற்ற 89 திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்து, ரூ. 35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு கேரளா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு பெய்து வரும் தொடர் மழையால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்.
1.98 லட்சம் சதுர அடியில்…
மொத்தம் 6.98 ஏக்கரில் 1.98 லட்சம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் பெரியார் அறிவுலக நூலகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகள் பிரிவு, ஆடிட்டோரியம், கோளரங்கம், முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் கண்காட்சி அறை, இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நுாலகம், மூன்றாம் தளத்தில் நிர்வாக அலுவலகம், போட்டி தேர்வுக்கான நுாலகம் அமைந்துள்ளது.
நான்காம் தளத்தில் பருவ இதழ்கள் பிரிவு, தமிழ் நுால்கள் பிரிவு, ஐந்தாம் தளத்தில் ஆங்கில நுால்கள் பிரிவு , ஆறாம் தளத்தில் ஆங்கில நுால்கள் பிரிவு, ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நுாலகம் ஆகியவை அமைந்துள்ளன.