சென்னை
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் தேசிய சுகாதார இயக்கத்தில் சுகாதார திட்டங்களை செயல்படுத்த ரூ.318.17 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.இதுதொடர்பாக, சுகாதாரம்,குடும்ப நலத்துறை அண்மையில் வெளியிட்ட உத்தரவில், மத்திய அரசு 2-வது தவணையாக வழங்கிய ரூ.190.90 கோடியும், மாநில அரசின் 40 சதவீத பங்கான ரூ.127.27 கோடியும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எஸ்என்ஏ-ஸ்பார்ஷ் தளம் மூலம் செலவிடப்படும்.
இந்த நிதி இனப்பெருக்கம் மற்றும் குழந்தைகள் நலத்துக்கான நெகிழ்வான நிதித்தொகுப்பு, சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல், தேசிய சுகாதாரத் திட்டம் மற்றும் நகர்ப்புற சுகாதார இயக்கம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் பொதுப்பிரிவுக்கு ரூ.230.52 கோடியும், பட்டியலினத்தவர் துணைத் திட்டத்துக்கு (எஸ்சிஎஸ்பி) ரூ.79.33 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்துக்கு (எஸ்டிஎஸ்பி) ரூ.2.75 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் மத்திய அரசின் பங்கு ரூ.138.31 கோடியாகவும், மாநில அரசின் பங்கு ரூ.92.21 கோடியாகவும் உள்ளது. எஸ்சிஎஸ்பி திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.47.60 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.31.73 கோடியும் ஆகும். எஸ்டிஎஸ்பி திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.1.65 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.1.10 கோடியும் ஆகும்.
பிரதமரின் பழங்குடியினர் நீதி மகா அபியான் (பிஎம்-ஜன்மேன்) மற்றும் தர்த்தி ஆபா பழங்குடியினர் கிராம மேம்பாட்டு இயக்கம் (DAடிஏ-ஜேஜியுஏ) ஆகிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிதி கிடைப்பதைப் பொறுத்து, திருத்திய மதிப்பீடு/ நிதி மேலாண்மை ஏற்பாட்டில் கூடுதலாக ரூ.5.56 கோடி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
எஸ்என்ஏ-ஸ்பார்ஷ் நடைமுறை திட்டங்களை செயல்படுத்தவும், ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக செலவு ஏற்படாததை உறுதி செய்யவும் தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழக இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் இலக்குகளை மாற்றியமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.