தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பு மேற்கொள்பவரின் பதிவு செய்யப்பட்ட பெயரைக் கைப்பேசியில் காட்டும் புதிய வசதியை (CNAP) நவ. 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், ட்ரூகாலர் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகளின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் 295 நகரங்களைச் சேர்ந்த 62,000 ஸ்மார்ட்போன் பயனர்களிடம் சர்வே நடத்தியது. இதில், 57 சதவீதம் பேர் தங்களது ஸ்மார்ட்போன் பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண ட்ரூகாலர் போன்ற தனியார் செயலிகளைச் சார்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு நிறுவனமே அழைப்பவரின் பதிவு செய்யப்பட்ட பெயரைக் காட்டினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு 31,686 பேர் பதிலளித்துள்ளனர். அவர்களில் 61 சதவீதம் பேர், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயர் காட்டும் வசதியைப் பயன்படுத்தி, ட்ரூகாலர் போன்ற செயலிகளை நீக்கிவிடுவோம் எனக் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், 28 சதவீதம் பேர் ட்ரூகாலர் சேவையின் மீது நம்பிக்கை இருப்பதால் தொடர்ந்து பயன்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் தங்களது தொடர்புப் பட்டியலில் இல்லாத அழைப்பாளர்களை அடையாளம் காண வேண்டிய அவசியமில்லை என்றும், 8 சதவீதம் பேர் தெளிவான பதிலை அளிக்கவில்லை என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தொடர்புப் பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 31,257 பேரில் 57 சதவீதம் பேர் தனியார் செயலிகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். மேலும், 28 சதவீதம் பேர் அழைப்பை ஏற்ற பிறகே யார் அழைத்தது என்பதைத் தெரிந்துகொள்வதாகவும், 11 சதவீதம் பேர் தங்களது தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கெனவே அழைப்பவரின் பதிவு செய்யப்பட்ட பெயரைக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ட்ரூகாலருக்கு சவால்
கடந்த ஜூன் நிலவரப்படி, உலகளவில் ட்ரூகாலர் நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை 47.1 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். புதிய வசதி அறிமுகமானால், அழைப்பவரின் பெயரைத் தெரிந்துகொள்வதற்காக மட்டும் ட்ரூகாலர் போன்ற செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனினும், தேவையற்ற அழைப்புகளைப் புகாரளித்தல், மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகளைக் கண்டறிதல், அழைப்புகளைத் தடுப்பது, நிறுவனங்களின் விவரங்களைக் காட்டுதல் மற்றும் ஏஐ அடிப்படையிலான அழைப்புத் திரையிடல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை காரணமாக இந்த செயலி முக்கியத்துவம் பெறலாம்.