ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு, பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவுடன் நிறைவடைந்தன. இதனால், தொடர்ந்து இரண்டு நாட்களாக நீடித்த ஏற்றம் முடிவுக்கு வந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 429.11 புள்ளிகள் ( 0.59 சதவீதம்) சரிந்து 72,638.70 புள்ளிகளில் நிலைத்தது. வர்த்தகத்தின் இடையே 599.09 புள்ளிகள் குறைந்து 72,468.72 புள்ளிகளைத் தொட்டது. சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன; நான்கு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 173.05 புள்ளிகள் (0.76 சதவீதம்) குறைந்து 22,603.05 புள்ளிகளில் நிறைவடைந்தது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீத புள்ளி உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதல் வட்டி உயர்வு இதுவாகும். ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்தது.
வட்டி உயர்வு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொள்கை நிலைப்பாட்டை நடுநிலையிலிருந்து படிப்படியாக இறுக்கும் அணுகுமுறைக்கு மாற்றியது முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்தது. “குறுகிய காலத்தில் வட்டி குறைப்புக்கு வாய்ப்பில்லை. சூழலுக்கு ஏற்ப வட்டி உயர்த்தப்படலாம் அல்லது மாற்றமின்றி தொடரலாம்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.41 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு 102 அமெரிக்க டாலராக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று ரூ.2,961.30 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதும் சந்தைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.
டைட்டன், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, அதானி போர்ட்ஸ் பங்குகள் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்தன. கோட்டக் மகிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் உயர்ந்தன.
உலோகத் துறை குறியீடு 2.46 சதவீதம் சரிந்தது. நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், வாகனம், தகவல் தொழில்நுட்பத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. தொலைத்தொடர்பு, பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஏற்றம் கண்டன.
வளர்ச்சி மதிப்பீடு உயர்த்தப்பட்டிருந்தாலும், பணவீக்கம் குறித்த கவலையும் வட்டி உயர்வுக்கான சாத்தியமும் சந்தை உணர்வைப் பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆசிய சந்தைகளில் தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங் குறியீடுகள் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் செவ்வாய்க்கிழமை உயர்வுடன் நிறைவடைந்திருந்தன.