டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவன நகை விற்பனை வளர்ச்சி எதிர்பார்ப்பைவிட குறைந்ததால், அதன் பங்கு விலை சரிந்தது.
நேற்றைய வர்த்தக முடிவில், என்எஸ்இ சந்தையில் டைட்டன் பங்கு ரூ.173 குறைந்து, ரூ.4,377 ஆக நிறைவடைந்தது. இது 3.80 சதவீத சரிவாகும். பிஎஸ்இ சந்தையில் ரூ.160 குறைந்து, ரூ.4,380 ஆக முடிவடைந்தது. அங்கு சரிவு 3.52 சதவீதம். வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் பிஎஸ்இயில் ரூ.4,334.90 வரை இறங்கியது.
இரண்டாம் காலாண்டில் நகை விற்பனை 21 சதவீதம் வளர்ந்துள்ளது. ஆய்வாளர்கள் 25 முதல் 27 சதவீத வளர்ச்சியை எதிர்பார்த்தனர்.
பண்டிகை கால விற்பனை டிசம்பர் காலாண்டுக்கு நகர்ந்ததும், முதலீட்டுக்கான தங்க நாணயங்களின் தேவை குறைந்ததும் இதற்குக் காரணம் என சிட்டி தெரிவித்துள்ளது.
எனினும், நோமுரா, சிட்டி, எச்எஸ்பிசி உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் பங்குகளை வாங்கலாம் என்ற பரிந்துரையைத் தொடர்ந்துள்ளன. அடுத்த 12 மாதங்களுக்கான சராசரி இலக்கு விலை ரூ.5,423 ஆக உள்ளது.
கடிகார விற்பனை 30 சதவீதமும், கண் பராமரிப்புப் பிரிவு விற்பனை 28 சதவீதமும் வளர்ந்துள்ளன. நிறுவனம் புதிதாக 78 கடைகளைத் திறந்துள்ளது.
ரேகா ஜுன்ஜுன்வாலா டைட்டன் நிறுவனத்தில் 5.31 சதவீத பங்குகளை வைத்துள்ளார். நீண்டகால வளர்ச்சி வாய்ப்பைக் கருத்தில்கொண்டு, விலைச் சரிவை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பார்க்கலாம் என நோமுரா தெரிவித்துள்ளது.
டைட்டன் தனது துறையில் முதன்மையான முதலீட்டுத் தேர்வு என்றும் நோமுரா கூறியுள்ளது. நிறுவனத்தின் மொத்த சில்லறை விற்பனை வலையமைப்பு 3,758 கடைகளாக விரிவடைந்துள்ளது.