ஆப்பிரிக்காவில் டிஜிட்டல் நிதிச் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல் மணி நிறுவனம், லண்டன் பங்குச் சந்தையில் நேற்று (அக்.9) அறிமுகமானது. கடந்த சில ஆண்டுகளில் அங்கு நடைபெற்ற மிகப்பெரிய புதிய பங்கு வெளியீடாக (ஐபிஓ) இது அமைந்துள்ளது.
ஏர்டெல் மணி நிறுவனத்தின் ஒரு பங்கு வெளியீட்டு விலை 1.96 பவுண்டாக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்ப வர்த்தகத்தில் 2 பவுண்டு வரை உயர்ந்த பங்கு விலை, பின்னர் 1.94 பவுண்டாகச் சரிந்தது.
இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 700 கோடி டாலராக (530 கோடி பவுண்டு) மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக 800 முதல் 900 கோடி டாலர் வரை மதிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது பங்குகள் ஒதுக்கீடு பெற்ற முதலீட்டாளர்களுக்கு மட்டுமே நிபந்தனை அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அக்டோபர் 14-ம் தேதி முதல் முழுமையான வர்த்தகம் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து பார்தி குழுமத் தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில், ‘‘லண்டன் பங்குச் சந்தையில் ஏர்டெல் மணி பட்டியலிடப்பட்டது, பிரிட்டன் முதலீட்டுச் சந்தை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது’’ என்றார்.
ஏர்டெல் ஆப்பிரிக்காவில், பார்தி ஏர்டெல் நிறுவனம் 79.2 சதவீத பங்குகளையும், ஏர்டெல் மணியில் ஏர்டெல் ஆப்பிரிக்கா 77.85 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இதன்மூலம் ஏர்டெல் மணியில் பார்தி ஏர்டெல்லின் மறைமுகப் பொருளாதாரப் பங்கு சுமார் 61.6 சதவீதமாக உள்ளது.