மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 114 அமெரிக்க டாலரை கடந்ததால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று தொடர்ந்து நான்காவது நாளாகச் சரிவுடன் நிறைவடைந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனையும், பல்வேறு துறைகளில் நிலவிய விற்பனை அழுத்தமும் சந்தையைப் பாதித்தன.
மும்பை பங்குச்சந்தையின் 30 பங்குகள் அடங்கிய சென்செக்ஸ், உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. பின்னர் 797.02 புள்ளிகள் சரிந்து, 72,452.37 புள்ளிகள் வரை சென்றது. இறுதியில் சரிவிலிருந்து ஓரளவு மீண்டு, 125.56 புள்ளிகள் (0.17 சதவீதம்) குறைந்து, 73,123.83 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி, வர்த்தகத்தின்போது 315.65 புள்ளிகள் சரிந்து, 22,372 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தக முடிவில் 87.65 புள்ளிகள் (0.39 சதவீதம்) குறைந்து, 22,600 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் நிறுவனங்களில் டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் பங்குகள் தலா 3 சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்தன. டிரெண்ட், டெக் மகிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், இண்டிகோ, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.
எனினும், எட்டர்னல், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
சர்வதேசச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.10 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு 114.42 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது. எரிசக்தி விநியோகத் தடைகள் குறித்த அச்சம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு மற்றும் நிறுவனங்களின் லாப வரம்புகள் தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிஃப்டியைவிட நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளில் சரிவு தீவிரமாக இருந்ததாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுத் தலைவர் வினோத் நாயர் கூறினார். இந்தியா விக்ஸ் உயர்வு, குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கம் தொடரக்கூடும் என்பதைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,458.70 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றனர். உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,891.32 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.
ஆசியாவில் சீனா, ஹாங்காங், தென்கொரியச் சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஜப்பான் சந்தை சரிந்தது. ஐரோப்பியச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. அமெரிக்கப் பங்குச்சந்தைகளும் வியாழக்கிழமை சரிவுடன் முடிந்திருந்தன.
நேற்று முன்தினம் சென்செக்ஸ் 460.30 புள்ளிகள் குறைந்து 73,249.39 புள்ளிகளிலும், நிஃப்டி 123.70 புள்ளிகள் சரிந்து 22,687.65 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. உலகளாவிய பலவீனமான சந்தைச் சூழலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் பாதித்தது.