முன்னணி சரக்கு வர்த்தகப் பரிவர்த்தனை அமைப்பான என்சிடிஇஎக்ஸ் (NCDEX) நிறுவனம் என்டெக்ஸ் மற்றும் 'ஃபின்டெக்ஸ்' என்ற 2 பங்கு குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சரக்கு வர்த்தகத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த என்சிடிஇஎக்ஸ் நிறுவனம் தற்போது பங்குச் சந்தை வர்த்தகத்திலும் தடம்பதித்துள்ளது. நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதம், தினசரி சராசரி வர்த்தக மதிப்பு 30 சதவீதம், பீட்டா அளவு 20 சதவீதம் மற்றும் ஏற்ற இறக்க விகிதம் 20 சதவீதம் என பல காரணிகளை ஒருங்கிணைத்து புதிய குறியீடுகளுக்கான பங்குகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதில் ‘என்டெக்ஸ்’ குறியீடானது தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் 60 நிறுவனங்களில் இருந்து மிக அதிக வர்த்தகத் திறன் கொண்ட 20 பெரிய நிறுவனப் பங்குகளைக் கொண்டுள்ளது.
அதேபோல, ‘ஃபின்டெக்ஸ்’ குறியீடு காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர்த்து, நிதித் துறையைச் சேர்ந்த தகுதிவாய்ந்த முதல் 40 நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 முன்னணி நிறுவனங்களின் பங்குகளைக் கண்காணிக்கிறது. என்சிடிஇஎக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இக்குறியீடுகள், என்எஸ்இ இன்டிசஸ் லிமிடெட் மூலம் கணக்கிடப்பட்டு நிர்வகிக்கப்பட உள்ளன. ஆண்டுக்கு இருமுறை, அதாவது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இக்குறியீடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு சீரமைக்கப்படும். இதில் ஒரு தனிப்பட்ட பங்கின் உச்சவரம்பு 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2010 ஜனவரி மாதத்தை அடிப்படை ஆண்டாகவும், 10,000 புள்ளிகளை அடிப்படை மதிப்பாகவும் கொண்டுள்ள இக்குறியீடுகளின் நகர்வுகள் சந்தை நேரத்தின்போது உடனுக்குடன் வெளியிடப்படும் என என்சிடிஇஎக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான விகாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.