Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாராக்கடன் ரூ.2 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு

வாராக்கடன் ரூ.2 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு

வங்கிகளின் மொத்தக் கடனில் விவசாயக் கடன்களின் பங்கு 12.9 சதவீதமாக இருந்தாலும், மொத்த வாராக்கடனில் விவசாயக் கடன்களின் பங்கு 37.5 சதவீதமாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், வங்கிகளின் விவசாயக் கடன் வாராக்கடன் (NPA) வரும் 2028 மார்ச் மாதத்துக்குள் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று கடன் மதிப்பீட்டு நிறுவனமான கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை நீண்டகால சராசரியான 868.6 மி.மீட்டருடன் ஒப்பிடுகையில் 759.4 மி.மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. இது சராசரியைவிட 13 சதவீதம் குறைவாகும். 2015-க்குப் பிறகு நடப்பாண்டு பருவமழை வெகுவாக குறைந்துள்ளது.

இதன் தாக்கத்தால், வங்கிகளில் விவசாயக் கடன் வாராக் கடன் அளவு 2026 ஜூன் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2028 மார்ச் மாதத்துக்குள் ரூ.1.90 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை உயரக்கூடும். விவசாயக் கடன்களுக்கான மொத்த வாராக்கடன் விகிதம் (GNPA) தற்போதைய 5.11 சதவீதத்திலிருந்து 5.30 முதல் 5.60 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் நாட்டின் மொத்த விவசாயக் கடனில் 48 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் இயல்பான அளவைவிட 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.பஞ்சாபில் 41 சதவீதமும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 23 முதல் 24 சதவீதமும் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நாட்டின் மொத்த விவசாயக் கடனில் 3-ல் ஒரு பங்கைக் கொண்டுள்ள நான்கு மாநிலங்கள் ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளன.

நாட்டின் விவசாயக் கடனில் 68 சதவீதம் அளவுக்கு, இயல்பான அளவைவிட 20 சதவீதத்துக்கும் அதிகமாக மழை குறைந்த மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. 2015-ல் இந்தப் பங்கு 48 சதவீதமாக மட்டுமே இருந்தது. பருவமழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட காரீப் பருவப் பயிர்களுக்கான கடன்களை விவசாயிகள் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதன் தாக்கம் உடனடியாக வங்கிகளின் வாராக்கடனில் வெளிப்படாது. பயிர்க் கடன்கள் பொதுவாக இரண்டு பயிர் பருவங்களுக்கான தவணைகள் நிலுவையில் இருக்கும்போது வாராக்கடனாக வகைப்படுத்தப்படுகின்றன.

இதனால் 2026-ல் அறுவடை செய்யப்பட்ட காரீப் பயிர்களுக்கான கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், 2027-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வாராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கிடையே, வங்கிகளின் கடன் வளர்ச்சி மற்றும் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதன் காரணமாக, 2027 மார்ச் மாதத்திற்குள் விவசாயக் கடன் வாராக்கடன் விகிதம் 4.60 முதல் 4.80 சதவீதமாகக் குறையலாம். ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கக்கூடும்.

அதிக பாதிப்பு யாருக்கு?

வங்கிகளின் முக்கியக் கடன் பிரிவுகளில் விவசாயக் கடன்களில்தான் அதிக வாராக்கடன் விகிதம் காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் விவசாயக் கடன் வாராக்கடன் விகிதம் 5.11 சதவீதமாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், தொழில்துறையில் 1.48 சதவீதம், சேவைத் துறையில் 1.47 சதவீதம், சில்லறைக் கடன்களில் 0.96 சதவீதம் மட்டுமே வாராக்கடன் விகிதம் இருந்தது.

வங்கிகளின் மொத்தக் கடனில் விவசாயக் கடன்களின் பங்கு 12.9 சதவீதமாக இருந்தாலும், மொத்த வாராக்கடனில் விவசாயக் கடன்களின் பங்கு 37.5 சதவீதமாக உள்ளது. விவசாயக் கடன் வாராக்கடன்களில் சுமார் முக்கால் பங்கு பொதுத்துறை வங்கிகளிடம் இருப்பதால், அவற்றுக்கே அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி தாக்கம்

இது தவிர, மாநில அரசுகள் அறிவிக்கும் விவசாயக் கடன் தள்ளுபடிகளும் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமையலாம். 2014-15 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில், 10 மாநிலங்கள் சுமார் ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடிகளை அறிவித்தன. இந்தக் காலகட்டத்தில், கடந்த 2020 மார்ச் மாதத்தில் விவசாயக் கடன் வாராக்கடன் விகிதம் 10.33 சதவீதமாக உயர்ந்தது. கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட சில விவசாயிகளும் கடன் தவணைகளைச் செலுத்தாமல் இருந்திருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, பருவமழைப் பற்றாக்குறை, பயிர் விளைச்சல் குறைவு, கடன் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் ஆகியவை இணைந்து வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விவசாயக் கடன் வாராக்கடனை ரூ.2 லட்சம் கோடி வரை உயர்த்தக்கூடும்.

முந்தைய செய்தி
Trump's tariffs hurt Americans, says Canadian PM Carney
அடுத்த செய்தி
Exporters, MSMEs urged to leverage India-NZ FTA

தொடர்புடைய செய்திகள்