காப்பீட்டு முகவர்களுக்கான கமிஷன், நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்த ஐஆர்டிஏஐ முன்மொழிந்துள்ள மாற்றங்களால், அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் எல்ஐசி முகவர்களில் 15 முதல் 40 சதவீதம் பேர் வரை தொழிலில் இருந்து விலகக்கூடும் என காப்பீட்டுத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
காப்பீட்டு முகவர்களின் கமிஷன் வரம்பை குறைப்பது, காப்பீடு நிறுவனங்களின் நிர்வாக செலவுகளை குறைத்தல், ஊக்கத்தொகைகளுக்கு கட்டுப்பாடு, தவறான விற்பனைக்கு கமிஷனை திரும்ப பெறுதல், கடனுடன் காப்பீட்டு வழங்க தடை உள்ளிட்ட சீர்த்திருத்தங்களை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக கருத்துக்களை தெரிவிப்பதற்காக அவகாசம் வரும் 25ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
முன்னாள் எல்ஐசி நிர்வாக இயக்குநர் விபின் ஆனந்த் கூறுகையில், "புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 சதவீத முகவர்கள் வெளியேற வாய்ப்புள்ளது. குறிப்பாக, பகுதிநேரமாகப் பணியாற்றுபவர்களும், காப்பீட்டுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்காதவர்களும் விலகக்கூடும். இருப்பினும், அவர்கள் மூலம் கிடைக்கும் வணிகம், எல்ஐசியின் மொத்த வணிகத்தில் 1 முதல் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் . கமிஷன் மட்டுமின்றி, பரிசுகள், வெளிநாட்டுப் பயணச் சலுகைகள் உள்ளிட்ட ஊக்கத்தொகைகளைக் குறைப்பதும் முகவர்களின் வருமானத்தைப் பாதிக்கும்.
காப்பீட்டுக் கொள்கையை விற்பனை செய்ய வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து சந்திப்பதற்கான பயணச் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் அதேநேரம், ஊக்கத்தொகைகள் குறைக்கப்பட்டால், வங்கிகள் வாயிலான காப்பீட்டு விற்பனையில் எல்ஐசிக்கு வாய்ப்புகள் அதிகரிக்கலாம்" என்றார்.
எல்ஐஏஎஃப்ஐ அமைப்பின் தலைவர் கஜபதி ராவ் கூறுகையில், "புதிய கட்டுப்பாடுகள் இளம் தலைமுறையினரை காப்பீட்டு முகவர் தொழிலில் சேர்வதிலிருந்து தடுக்கலாம்" என்றார்.
காப்பீட்டுச் செலவுகளைக் குறைப்பதுடன், முகவர்களின் வாழ்வாதாரம், புதிய நியமனங்கள் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் இறுதி விதிமுறைகள் அமைய வேண்டும் என்பதே காப்பீட்டுத் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.