சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், ரூ.4,900 கோடியில் அமைக்கப்பட்ட பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் நான்காவது வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க நேற்று போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் வந்த பிரதமரை, முதல்வர் ச.ஜோசப் விஜய் வரவேற்றார். அங்கு, பிரதமர் மோடியும், முதல்வர் ஜோசப் விஜயும் இணைந்து மெட்ரோ ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பிரதமர் மோடி, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து ரயிலில் பயணம் செய்தார். போரூரில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஆகியோர் சென்று திரும்பினர். பயணத்தின் போது, பிரதமர் மோடி ஸ்டார்ட் அப் நிறுவன தொழிலதிபர்களை சந்தித்து பேசினார்.
இன்று (அக். 12) முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இரு திசைகளிலும் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் நாள் முழுவதும் 15 நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்படும். பூந்தமல்லி புறவழிச்சாலை, வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும்.
தற்போதைய வழித்தடத்தில் வடபழனியில் முதல் கட்ட மெட்ரோ ரயில்களுக்கு மாறிச் செல்ல முடியும். இதன் மூலம் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நகரின் பிற பகுதிகளுக்கு மெட்ரோவில் செல்லும் வசதி கிடைத்துள்ளது. இந்த வழித்தடத்தில் 3.7 கிலோமீட்டர் நீளத்துக்கு இரு அடுக்குக் கட்டமைப்பும், ஓட்டுநரில்லா ரயில் இயக்கத்துக்கான மேம்பட்ட சமிக்ஞை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ
• திட்ட மதிப்பு: ரூ.4,900 கோடி
• வழித்தட நீளம்: சுமார் 15 கி.மீ.
• உயர்மட்ட நிலையங்கள்: 11
• இரு அடுக்குக் கட்டமைப்பு: 3.7 கி.மீ.
• ரயில் இடைவெளி: உச்ச நேரத்தில் 10 நிமிடம்; பிற நேரங்களில் 15 நிமிடம்
எங்கெங்கே நிற்கும்?
மொத்தம் 14.64 கி.மீ. நீளமுள்ள இந்த ரயில் பாதையில் வடபழனி, போரூர் சந்திப்பு, போரூர் புறவழிச்சாலை, தெள்ளியரகரம், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி அரசு மருத்துவமனை(முல்லைத்தோட்டம்), பூந்தமல்லி (பேருந்து நிலையம்), பூந்தமல்லி புறவழிச்சாலை என 11 உயர் மட்ட ரயில் நிலையங்களில் மட்டும் ரயில்கள் நின்றுச் செல்லும். வடபழனி- போரூர் சந்திப்பு இடையே உள்ள சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய 6 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது. இந்த ரயில் நிலையங்களில், மாதாவரம்-சோழிங்கநல்லூர் இடையே, சிவப்பு வழித்தடத்துக்கான பணிகளும் நடக்கிறன்றன. அதனால் இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது. வடபழனியில் புறப்படும் ரயில், அடுத்து போரூர் சந்திப்பிலிருந்துதான் நின்று செல்லும்.
பயணக் கட்டணம்
புதிய பாதையில் வடபழனியில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை செல்ல ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து பூந்தமல்லி பேருந்து நிலைத்துக்கு ரூ.10, காட்டுப்பாக்கத்துக்கு ரூ.20, அய்யப்பன்தாங்கல் முதல் போரூர் சந்திப்பு வரைச் செல்ல தலா ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.வடபழனியில் இருந்து போரூர் சந்திப்பு முதல் அய்யப்பன்தாங்கல் வரை செல்ல ரூ.30, அதன் பிறகு உள்ள காட்டுப்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரைச் செல்ல ரூ.40 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தலா 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.