சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். அப்போது, மையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து நிபுணர்கள் அவருக்கு விளக்கினர்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மஞ்சள் வழித்தடத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கோயிலில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, மூளை ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றார். ஐஐடி இயக்குநர் காமகோடி வரவேற்றார்.
சென்னை ஐஐடியால் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம், உயர் தெளிவுத்திறன் கொண்ட மூளைப் படமெடுப்பில் கவனம் செலுத்தி, மனித மூளையைச் செல்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான இணைப்புகளின் அளவில் வரைபடமாக்கும் மிகப்பெரிய உலகளாவிய திட்டத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் மனித மூளை குறித்த தரவுகள், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கி, உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாகத் திகழ்வதை இந்த அதிநவீன மையம் இலக்காகக் கொண்டுள்ளது.பிரதமருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆகியோரும் சென்றனர்.