சென்னை:
சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கட்டப்பட்டு வரும் 3.2 கி.மீ நீளத்திலான தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை நான்கு வழி உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தில், தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களுக்கு மேல் கட்டுமானப் பணிகளை 'போர்ட்டல் ஃபிரேம்' தொழில்நுட்பத்தில் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தொடங்குகிறது.திட்டத்தின் தொடக்கத்தில் நெடுஞ்சாலைத் துறை சமர்ப்பித்த மேம்பால வடிவமைப்பில் சிறு மாறுபாடுகள் காணப்பட்டதால், கடந்த சில மாதங்களாக இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு மேலான கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, வடிவமைப்பை ஆய்வு செய்ய ஜப்பானிய ஆலோசனை நிறுவனம் ஒன்றை சி.எம்.ஆர்.எல். நியமித்தது. ஆய்வின் முடிவில் வடிவமைப்பில் பெரிய குறைகள் ஏதுமில்லை எனத் தெரிய வந்தது. இருப்பினும், இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு மேல் 300 மீட்டர் தூரத்திற்கு, 15 மீட்டர் இடைவெளியில் 'போர்ட்டல் ஃபிரேம்களை' அமைக்க நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதற்கு மெட்ரோ நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
பயன்பாட்டில் உள்ள ஒரு நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதைக்கு நேர் மேலே கட்டப்படும் நாட்டின் முதல் உயர்மட்ட மேம்பாலம் இதுவாகும். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை 14 முதல் 15 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. அதை பாதிக்காத வகையில், சாலையின் மேற்பரப்பில் இருந்து 7 மீட்டர் ஆழம் வரை மட்டுமே துளையிட்டு மேம்பாலத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் ஆயத்த எஃகு பாகங்களைக் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த போர்ட்டல் ஃபிரேம்களை நிறுவும் பணிக்கு மட்டும் குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
(பாலத்தின் முக்கிய அம்சங்கள்):
◦ புதிய காலக்கெடு: மார்ச் 2027
◦ திட்ட மதிப்பு: ரூ. 621 கோடி.
◦ பாதுகாப்பு: மெட்ரோ சுரங்கப்பாதைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் 7 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே அடித்தளம்.
◦ தொழில்நுட்பம்: மெட்ரோ நிலையங்களுக்கு மேல் உள்ள 460 மீட்டர் தூரத்தில், 300 மீட்டருக்கு இரு-கால்கள் கொண்ட 'போர்ட்டல் ஃபிரேம்கள்' அமைப்பு.
◦ அமைப்பு: 3.2 கி.மீ நீள மேம்பாலத்தில், 2.4 கி.மீ தூரம் மெட்ரோ சுரங்கப்பாதைக்கு நேர் மேலே அமைந்துள்ளது.
◦ பரிந்துரை: தேனாம்பேட்டை, நந்தனம் மெட்ரோ நிலையங்களுக்கு மேல் பாலம் கட்ட சி.எம்.ஆர்.எல் அனுமதி.