மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் காணப்படும் ‘ஸ்பைடர் கிரேட்டர்’ எனப்படும் சிலந்தி வடிவப் பள்ளத்தின் தோற்றத்தை நாசா செயற்கைக்கோள் படம் தெளிவாகக் காட்டியுள்ளது. சுமார் 60 முதல் 90 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் மோதியதால் இந்த அமைப்பு உருவானதாகக் கருதப்படுகிறது.
லேண்ட்சாட்–9 செயற்கைக்கோள் செப்டம்பர் 20-ம் தேதி இதைப் படம்பிடித்தது. மையத்திலிருந்து சிலந்தியின் கால்களைப்போல விரியும் வெளிர்நிற மணற்கல் முகடுகள் இதில் தென்படுகின்றன. முழு பள்ளத்தின் பரப்பு சுமார் 13 கிலோமீட்டர் நீளமும், 11 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. மைய அமைப்பு மட்டும் சுமார் நான்கு கிலோமீட்டர் அகலத்தில் விரிந்துள்ளது.
விண்கல் மோதியபோது நிலப்பகுதி மீண்டும் மேலெழுந்ததால் மைய மேடு உருவானதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். சுற்றியிருந்த பாறைகள் நீண்டகால அரிப்பால் சிதைந்த நிலையில், உறுதியான மணற்கல் முகடுகள் எஞ்சியுள்ளன.
முதலில் இது எரிமலைச் செயல்பாட்டால் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. பின்னர் பாறைகளில் கண்டறியப்பட்ட கடுமையான அதிர்வால் உருவான கூம்பு வடிவ முறிவுகள், விண்கல் தாக்கத்தை உறுதிப்படுத்த உதவின.
எனினும், தாக்குதல் நிகழ்ந்த துல்லியமான காலம் இன்னும் கண்டறியப்படவில்லை. பாறைகளிலுள்ள குவார்ட்ஸ், சிர்கான் படிகங்கள், மோதலின் தன்மையையும் விண்கல் விழுந்த கோணத்தையும் ஆராய உதவுகின்றன.