போட்ஸ்வானா:
திருமணம் முடிந்து பத்து நாட்கள்தான் ஆகியிருந்தது. வாழ்க்கையின் இனிய தொடக்கமாக இருக்க வேண்டிய தேனிலவு பயணம், சாம்–அன்னா மெக்ரீ தம்பதிக்கு உயிரைப் பறிக்கும் அனுபவமாக மாறியது.அமெரிக்காவைச் சேர்ந்த சாம் (31), அன்னா தம்பதி கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு சதுப்பு நிலப்பகுதியில் பாரம்பரிய சிறிய படகில் வனவிலங்குகளை ரசித்தபடி பயணம் செய்தனர். அப்போது திடீரென தண்ணீருக்குள் இருந்து வந்த நீர்யானை படகை நெருங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் சாமை கவ்விப் பிடித்த நீர்யானை, அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நொடி உறைந்த அன்னா, அடுத்த கணமே கணவரைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கினார்.
அந்தப் பகுதியில் முதலைகள் இருப்பதை அறிந்திருந்தபோதிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் நீர்யானையை நோக்கிச் சென்ற அவர், அதை பலமாகத் தாக்கினார். இதையடுத்து சாமை விட்டுவிட்டு நீர்யானை அங்கிருந்து நகர்ந்தது.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சாமுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் வருவதற்காக சுமார் 13 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த நேரம் முழுவதும் அவர் மயக்கம் அடையாமல் இருக்க முயன்றார்.
பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாமுக்கு அவசர அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. பல மாத சிகிச்சைக்குப் பிறகு அவர் படிப்படியாக மீண்டு வருகிறார்.
“திருமணம் செய்துகொண்ட உடனே வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்ற எண்ணம்தான் என்னை உயிருடன் வைத்திருந்தது” என சாம் கூறியுள்ளார். அந்த ஒரு நாள், தங்கள் வாழ்க்கையின் மதிப்பையே மாற்றிவிட்டதாக தம்பதி தெரிவித்துள்ளனர்.