மொட்டையடிக்கப்பட்ட தலைகள், உடலெங்கும் பச்சைக் குத்தல்கள், கை கால்களில் விலங்குகள்… ஆயுதக் காவலர்களுக்கு நடுவே வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டனர் கைதிகள். எல் சால்வடாரின் பிரம்மாண்டச் சிறைக்கு முதல் கட்டமாக 2,000 பேர் மாற்றப்பட்டபோது வெளியான காட்சிகள் இவை.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில், குற்றக் கும்பல்களை ஒடுக்க அதிபர் நயீப் புக்கெலே மேற்கொண்ட நடவடிக்கையின் முக்கிய அங்கமாக இந்தச் சிறை உருவாக்கப்பட்டது. டெகொலூகாவில் அமைந்துள்ள ‘பயங்கரவாதத் தடுப்பு மையம்’ எனப்படும் செகாட் சிறையில் 40 ஆயிரம் பேரை அடைக்க முடியும். குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட முதல் குழுவினர், 2023 பிப்ரவரி 24 அன்று இங்கு மாற்றப்பட்டனர்.
உள்ளே மெத்தைகள் இல்லாத இரும்புப் படுக்கைகள், அடுக்கடுக்கான அறைகள், இடைவிடாத கண்காணிப்பு எனக் கடுமையான சூழல் நிலவுகிறது. சிறையில் 256 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் கைதிகள் பயன்படுத்த இரண்டு கழிப்பறைகளும் இரண்டு தண்ணீர்த் தொட்டிகளுமே அமைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் சந்திப்புக்கும் அனுமதியில்லை.
2022 மார்ச்சில் கொலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட அவசரநிலை, பெருமளவிலான கைதுகளுக்கு வழிவகுத்தது. பிடியாணையின்றிக் கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், 2023 பிப்ரவரிக்குள் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. பொதுமக்களுக்கு இனி இவர்களால் தீங்கு ஏற்படாது என்று புக்கெலே கூறினார்.
குற்றக் கும்பல்களின் அச்சுறுத்தல் குறைந்ததால் அரசின் நடவடிக்கைக்கு மக்களிடையே ஆதரவு கிடைத்தது. ஆனால், அப்பாவிகளும் கைது செய்யப்படுவதாகவும், காவலில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின. பாதுகாப்புக்கான அரசின் பதிலாக உயர்ந்த இந்த இரும்புக்கோட்டை, கைதிகளின் அடிப்படை உரிமைகள் குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியது.
குற்றங்களை ஒடுக்குவதுடன், தவறாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என்பதே மனித உரிமை அமைப்புகளின் வலியுறுத்தலாக உள்ளது.