இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசூலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸை சிறையிலிருந்து விடுவித்து, வீட்டுக் காவலில் வைக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரோவும் ஃப்ளோரஸும் கடந்த ஜனவரியில் கராகஸிலுள்ள வீட்டிலிருந்து அமெரிக்கப் படையினரால் பிடிக்கப்பட்டு, நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். அமெரிக்காவுக்குக் கொகெய்ன் கடத்தும் சதியில் ஈடுபட்டதாக இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.69 வயதான ஃப்ளோரஸ், சிறையில் 11 கிலோ எடை இழந்துள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை தேவைப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் கூறினர். தலை சுற்றல், மூச்சுத்திணறல் தொடர்வதாகவும், ஜூலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். கைது நடவடிக்கையின்போது சுவர் அல்லது அலமாரியில் மோதித் தள்ளப்பட்டதால் நிரந்தரத் தழும்புகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
நியூயார்க் இல்லத்தில் 24 மணி நேர காவலுடன் தங்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். கணவருக்கு ஆதரவாக இருப்பதையே விரும்புவதால் அவர் தப்பிச் செல்லமாட்டார் என்றும் வாதிட்டனர். ஆனால், அவர் தப்பிச் செல்லும் அபாயமும், பொதுமக்களுக்கு ஆபத்தும் இருப்பதாகக் கூறி அரசுத் தரப்பு ஜாமீனை எதிர்த்துள்ளது. தேவையானபோது மருத்துவமனை சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கான சட்டப் பாதுகாப்பைக் குறிப்பிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்யவும் இருவரது வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். அடுத்த விசாரணையில் ஃப்ளோரஸின் கோரிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.