தாய்லாந்து ராணி சுதிதா, ‘கிரிபென்’ ரக போர் விமானத்தை முதன்முறையாகத் தனியாக இயக்கியுள்ளார். விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய அவர், பின்னர் விமானப் பயிற்சி பெற்று போர் விமானத்தை இயக்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சுவீடன் நாட்டில் தயாரிக்கப்படும் ஜேஏஎஸ் 39சி கிரிபென் ரக போர் விமானத்தை அவர் இயக்கினார். தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இந்தப் பயணம் நடைபெற்றது. சுமார் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விமானப் பயணத்தைத் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் நேரில் பார்வையிட்டார். விமானத்தைத் தரையிறக்கிய பிறகு, ராணிக்கு மலர்க்கொத்து வழங்கி அவர் பாராட்டினார்.
இந்தப் பயணத்துக்கு முன்பு, ராணி சுதிதா விமானப் பயிற்சி கருவியில் பயிற்சி பெற்றார். மேலும், பயிற்றுநருடன் இரண்டு இருக்கைகள் கொண்ட கிரிபென் விமானத்தையும் இயக்கினார். சுமார் 10 மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு, தனியாக விமானத்தை இயக்கினார். முன்னதாக விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சுதிதா, பின்னர் ராணுவத்தில் இணைந்து விமானப் பயிற்சி பெற்றார். பல்வேறு வகையான விமானங்களில் 1,188 மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் செய்த அனுபவம் அவருக்கு உள்ளது.
மன்னருடன் இணைந்து அரசுமுறைப் பயணங்களிலும் துணை விமானியாகப் பணியாற்றியுள்ளார். போர் விமானத்தைத் தனியாக இயக்கியதன் மூலம், ராணுவ விமானப் பயிற்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.