கொடைக்கானல் மலைப் பகுதியில் காலநிலைக்கு ஏற்றவாறு பல்வேறு வகைகளில், பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும். சில மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன.
இவற்றில் முக்கியமானவை நீலக் குறிஞ்சி மலர்கள். கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 2019-ம் ஆண்டு நீலக் குறிஞ்சி செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. இவை ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை பூத்துக் குலுங்கும். பிரையன்ட் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீலக் குறிஞ்சி மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும், நீலக் குறிஞ்சி மலர்கள் அருகே பெயர்ப் பலகை, தனித்துவ சிறப்பு குறித்த பதாகைகள வைக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மூணாறு, ஊட்டி பகுதிகளில் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கியதை தொடர்ந்து, தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியிலும் இவை பூத்துக் குலுங்குவது குறிப்பிடத்தக்கது.