மறைந்த அமெரிக்கப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் அணிந்த புகழ்பெற்ற வெள்ளை நிற மின்னும் கையுறை, வரும் டிசம்பர் மாதம் ஏலத்துக்கு வர உள்ளது. இது அதிகபட்சம் 8 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற பாடகரான மைக்கேல் ஜாக்சனின் கலைப் பொருட்கள், உடைகள் மற்றும் அணிகலன்கள் ஏலத்துக்கு வர உள்ளன. இதில், அவர் பயன்படுத்திய வெள்ளைக் கையுறை முக்கியப் பொருளாக இடம்பெற்றுள்ளது. 1983-ம் ஆண்டு நடைபெற்ற மோட்டவுன் 25 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘பில்லி ஜீன்’ பாடலுக்கு நடனமாடியபோது இந்தக் கையுறையை அவர் அணிந்திருந்தார். அப்போது தனது புகழ்பெற்ற ‘மூன்வாக்’ நடன அசைவையும் அவர் அறிமுகப்படுத்தினார்.இந்தக் கையுறை, 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 4.3 லட்சம் டாலருக்கு விற்பனையானது. தற்போது இதன் மதிப்பு 6 லட்சம் முதல் 8 லட்சம் டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபியில் உள்ள ரோஸ்வுட் ஹோட்டலில் டிசம்பர் 7-ம் தேதி இந்த ஏலம் நடைபெற உள்ளது. மைக்கேல் ஜாக்சன் அணிந்த சிவப்பு, கருப்பு நிற ‘த்ரில்லர்’ தோல் ஜாக்கெட் உள்ளிட்ட பொருட்களும் ஏலத்தில் இடம்பெறுகின்றன.