விமானிகளில் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்பதால், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க இஸ்ரேல் அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட விமானம், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டது. அப்போது விமானம் எத்தியோப்பிய வான்பரப்பில் இருந்தது.அடிஸ் அபாபாவுக்குத் திரும்பியதும் இந்தோனேசிய விமானி மாற்றப்பட்டார். பின்னர் மீண்டும் புறப்பட்ட விமானம் டெல் அவிவில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.
இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளின் விமானப் பணியாளர்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தோனேசிய விமானி இஸ்ரேலுக்கான விமானத்தை இயக்க முடியாது என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றும், தவறுதலாக இது நடந்துவிட்டது என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டதாக ஆப்பிரிக்கா நியூஸ் தெரிவித்துள்ளது.