பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்ஸென் (82), 2026-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் மற்றும் வானியற்பியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களின் கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறிவியலுக்குத் தெரிந்த மிகக் கடினமாகவே கண்டறியக்கூடிய துகள்களைக் கண்டறிய அண்டார்டிக் பனிக்கட்டியின் பிரமாண்டமான தொகுதியைப் பயன்படுத்துவதன் மூலம், பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு புதிய வழியை உருவாக்கியதற்காக ஹால்ஸெனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஃபிரான்சிஸ் ஹால்ஸென், 1944-ம் ஆண்டு பெல்ஜியத்தின் டீனன் நகரில் பிறந்தார். அமெரிக்காவின் விஸ்கான்சின்–மாடிசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். “நோபல் பரிசுக்கு நான் செய்யப்பட்டதாக கேள்விப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று ஹால்ஸென் தெரிவித்தார். அப்போது அவர் இத்தாலியில் இருந்தபடியே நோபல் குழுவினருடன் தொலைபேசியில் உரையாடினார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் ஜான் கிளாா்க் (83), மிஷெல் எச்.டெவரே (72), ஜான் எம்.மாா்டினிஸ் (67) ஆகிய மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவா்கள் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இலக்கியத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 8-ம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 9-ம் தேதியும் அறிவிக்கப்படுகின்றன. பொதுவாக ‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு’ என்று அழைக்கப்படும் ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் (Sveriges Riksbank Prize) பொருளாதார அறிவியல் பரிசு, அக்டோபர் 12-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.